Monday, 30 August 2010

மழையில் நனைந்த நன்பன்……
ஒரு நாள் மழை நேரம்
நன்பன் க்ரேஸியின் வீட்டுப் பக்கம் போய்
போய் கொண்டிருந்தேன்.
(அங்க ஏதாவது ப்ரீயா குடுக்குராங்களா?)
வீட்டுக்கு பின் புறத்தில் இருந்து கொண்டு
நன்பன் தனது பயிற்சி கொப்பியை மழையில்
பிடித்து நனைத்துகொண்டிருக்கிறான்.
நானும் பதரிப் போய்
”ஏன்னாச்சுடா?” என்று காரணம் கேட்டால்….
பயபுள்ள மேலதிக வகுப்புக்கு செல்வதென்று,
வீட்டில் சொல்லிவிட்டு படம் பார்க்க செல்வது வழக்கம்.
(அப்போ நீ???  ஹி..ஹி... அதெல்லாம் இங்க எதுக்கு...
அன்று செல்லும் போது கொப்பியை மறந்து விட்டான்.
வரும் போது மழை வந்ததால் நன்கு நனைந்து விட,
இவன் மட்டும் நனைந்தால் போதுமா?
கொப்பியும் நனைய வேண்டுமே!
அதுதான் வீடு வந்ததும் இந்த ஏற்பாடு…
(பாடக் குறிப்புகளுக்கு என்ன செய்வான்?
என்று நீங்கள் கேட்கலாம், அதைதான் முந்திய
இரவே எழுதி வைத்து விடுவானுள்ள்…….)
  (நாம எந்த ground'ல இறங்கினாலும் பிளான் பண்ணித்தான் இறங்குவோமுள்ள...)

Thursday, 26 August 2010

தம்புள்ள மைதானமும், மஹேல ஜயவர்தனயும்...பாகம் II

முதல் பாகத்தை படிக்க ingu kilikkavum...   


இந்த மைதானத்துக்கு ஒரு சிறப்பம்சமும் பெருமயும் என்னவெண்றால் இந்த மைதானம் இருப்பதும் பிரபல பதிவாளர்!! Mr .Faaique (அதாங்க நான்தான்)  இருப்பதும் ஒரே மாவட்டத்திலாகும். என் வீட்டிலிருந்து வெறும் 30 கி.மி. களே…)

பின்பு சாப்பாட்டு இடைவேலையின் போது வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு (அதை நீ சொல்லித்தானா தெரிய வேண்டும்) வந்து உட்கார்ந்து score board`ஐ கவனமாக பார்க்க தொடங்கினோம். பக்கத்தில் ஒரு கூட்டம் குரங்கு வித்தைகள் காட்டிக்கொண்டு இருந்த்தனர். (தொலைக்காட்சியில் வர வேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு வந்திருப்பானுங்க போலும்…) தப்பித்தவறி கெமராவில் பட்டு (எல்லாம் ஒரு அசட்டு நம்பிக்கைதான்) அதை யாராவது பார்த்து விட்டால், கதை கந்தலாகி விடும் என்பதால் நாம் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தோம்.(நமது இரசாயணவியல் ஆசிரியர் கிரிக்கட்டில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர், அவர் கண்ணில் பட்டால்……..)
அந்த நேரம் மஹேல ஜயவர்தன out of form`இல் இருந்த நேரம். அந்த நேரத்தில் வழமை போலவே சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இந்த சின்ன மேட்டருக்கா ”மஹேல ஜயவர்தன” என்று தலைப்பு வைத்தாய்? என்று திட்டக் கூடாது. மேட்டர் பின்னால் வரும். (யாருப்பா.. அது திரும்பி பின்னால் திரும்பிப் பாக்குரது…. நான் சொன்னது கட்டுரையின் பின்னால் வருமென்று)

போட்டியின் கடைசி நேரம் இரு ஒவர்களில் 26 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அனேகமானோரது எண்ணம் இலங்கை தோற்று விடும் என்பதாகவே இருந்தது. கடைசி நேரம் டில்ஷான் (அந்த நேரம் டில்ஷான் ஐந்தாவது அல்லது ஆறாவது துடுப்பாட வருவார்) தொடர்ந்து நான்கு நான்கு ரன்கள் அடிக்க முழு மைதானமும் குதூகலித்தது. நாமும் தலை கால் தெரியாமல் ஆடினோம்.

இங்கும் வழமை போல் இந்த நேரம்தான் விதி விளையாடியது, அதாவது, எவனோ ஒரு கமெராக் காரண் சரியாக நம்மையும் ஆட்டத்தையும் வீடியோ எடுத்து அது நேரடியாக ஒளிபரப்பாகி விட்டது. இது நமக்கு தெரியாததால் நாமும் ஆபிரிக்க காட்டு வாசி போல் தொடர்ந்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தோம்.

கடைசியில் இலங்கை அணி வெல்ல பரிசளிப்பையும் பார்த்து விட்டு போகலாம் என்றெண்ணினால், அந்தப் பகுதி இரும்புக்கம்பியால் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் அங்கும் இங்கும் தேடிய போது நம் ஆசிய விதிப்படி ஒரு ஆள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு ஒரு வழி இருப்பதை கண்டு பிடித்தோம். உடனே போலீஸின் கண்ணில் மண்னை தூவி விட்டு ( நீ அந்த கும்மிருட்டில் புகுந்தால் எவனுக்குய்யா தெரியும்.. ஓவரா பில்ட்-அப் குடுக்குர…)  அந்த வழியின் மூலம் ஊர்ந்து மைதானத்தை அடைந்தோம். முன்னாள் இலங்கை அணி பலத்த பாதுகாப்புடன் போய் கொண்டிருக்க அந்த சம்பவம் நடந்தது.

எவனோ ஒருவன் பார்வையாளர் பகுதியில் இருந்து “யோவ் மஹேல…… உனக்கு கிரிக்கட் சரி வராது. நீ வீட்டுக்கு போய் வேறு எதாவது வேலை பார்” (வேறு என்ன வேலை செய்வார்’? யாருக்காவது guess பண்ண முடியுமா?) என்று சத்தம் போட மஹேல ஜயவர்தனயும் தன் பங்குக்கு “யோவ் எவன்யா அது? தைரியமிருந்த்தால் வெளியே வாய்யா..” என்று சத்தம் போட… இதை கொஞ்சமும் எதிர் பாராத அந்த சௌண்ட் பார்ட்டி கூட்டதுக்குள் புகுந்து மறைந்தான்.

அதன் பின் வந்த காலங்களில் மஹேல ஜயவர்தன சிறந்த முறையில் விளையாடி அணியின் ஒரு சிறந்த தலைவராகவும் தன்னை வெளிப்படித்தினார். இன்றைய உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களை பட்டியலிட்டால் அதில் மஹேலவுக்கு ஒரு உயர்ந்த இடம் (கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம்? என்றெல்லாம் கேட்கக் கூடாது.) இருக்கிறது. இது அவரது தன்னம்பிக்கைக்கு நல்ல எடுத்துக்காட்டு..


நாம் திரும்பி வரும் போது மாத்தளை நகரம் வர பஸ் இல்லாமல் ஒரு லொரியில் ஏறி வழியில் ஓரிடத்தில் இறங்கி இன்னோர் லொரியில் ஏறினோம். அதில் ஏறிய பின்னர் தான் தெரிந்தது அந்த ஓட்டுனர் போதை வஸ்து பாவிப்பவர் என்று. வேகம் என்றால் அப்படியொறு நம் வரலாறு காணாத வேகம்… ஆஹா…. அன்று நம் வாழ்வில் கடைசி நாள் என்று நினைத்துக்கொண்டு நம் கைகளை இருக பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் பாடசாலையில் சொல்ல நாம் ஒவ்வொரு பொய் தயாரித்துக் கொண்டு போக, நாம் கிரிக்கட் பார்க்கப் போன விடயம் தொலைக்காட்சியில் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருந்ததால் முழுப் பாடசாலையும் பரவியிருந்தது. இது தெரியாமல் நாம் இரசாயணவியல் ஆசிரியரிடம் போய் பல்லித்து மாட்டிக் கொண்டு வழமை போல் வாங்கிக் கட்டினோம்.  (நம்ம கதைகளில் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு பினிஸிங் சரியில்லையே…)

Wednesday, 25 August 2010

தம்புள்ள மைதானமும், மஹேல ஜயவர்தனயும்...


2003ம் ஆண்டு நாம் உயர் தரம் படித்துக்கொண்டு இருக்கையில் தம்புள்ள மைதானத்தில் இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் கிரிக்கட் போட்டி நடக்க இருந்தது. இதை தெரிந்தவுடன் நானும் டட்ஸனும் ராஜாவும் போக முடிவெடுத்தோம். ஆனால் அன்று பாடசாலை நடக்கும் தினம், ஆனாலும் நமக்கு ரிஸ்க் எடுக்குரது ரஸ்க் சாப்பிடர மாதிரி என்பது நம் பதிவுகளை தொடர்ந்து!!! படிக்கும் (இதை எழுதும் போது உனக்கே சிப்பு வந்திருக்குமே சிப்பு..)  இதயம் பலவீனமில்லாத நல்லுள்ளம் படைத்த நன்பர்களுக்கு தெரியும்.எனவே, பாடசாலைக்கு முழுக்கு போட்டு விட்டு போவதென்று முடிவெடுக்கப் பட்டது. 

பாடசாலைக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொல்லி செய்தி அனுப்பிவிட்டோம், (அது எப்பவவாவது லீவு போடறவன் செய்றது..)  இதில் எனக்கும் ராஜாவுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை காரணம் (உங்களையெல்லாம் எவன் கணக்கிலேடுத்தான்?) நாம் அந்த ஊரில் தங்கி படித்துக்கொண்டிருந்தோம், ஆனால் டட்ஸனோ வீட்டில் இருந்து வெளியேறுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்பதால் அவன் வீட்டுக்கே சென்று கூட்டி வருவது என்று முடிவு செய்தோம். (சிங்கத்தையே அதன் குகைக்கு சென்று சந்திப்பதுதான் நம்ம ஸ்டைல்( இலங்கயில் சிங்கம் இல்லாததால் தப்பிச்சேன்).

சரியாக போட்டி தினத்தன்று நாமும் தயாராகி டட்ஸனின் வீட்டை அடந்த்தோம். நமது திட்டம் டட்ஸனின் தந்தை வீட்டை விட்டு வெளியேறியவுடன் நாம் டட்ஸனுடன் தப்பிப்பதே. ஹொலிவூட் படங்களுக்கு நிகராக  திட்டம் போட்டுவிட்டு போய் வசமாக  டட்ஸனின் தந்தையிடம் மாட்டிக்கொண்டோம் (எந்தவொரு விஷயத்தையும் நீ ப்ளான் பண்ணினா இப்படித்தான் இருக்கும்). பிறகு என்ன? ஆரம்பிக்க வேண்டியதுதானே…..!! திணர திணர கதர கதர திட்டு விழுந்தது. எல்லாம் ஒருவாறு முடிந்ததவுடன் ”வை ப்லட் சேம் ப்லட்” என மூவரும் துடைத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினோம்.  (அவ்வளவு திட்டியும் திருந்தவில்லை??? அப்பவே திருந்தியிருந்தா இப்போ எதுக்கு ப்லாக் எழுதிட்டு இருக்கனும்)
தம்புள்ள விகாரை 
 நமது திட்டப்படி முதலில் தம்புள்ள விகாரைக்கு சென்று சும்மா சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்த குரங்குகளுடன் குத்தாட்டம் போட்டு அதை  போட்டோ எடுத்து விட்டு (போட்டோல எப்படிய்யா வித்தியாசம் கண்டு பிடிச்சே) அப்படியே மைதானத்துக்கு நடையை விட்டோம். நமக்கு மைதானம் இருந்த இடம் தெரியாததால் ரொம்ப தூரம் நடக்க வேண்டியாகிவிட்டது. ஒருவாறு மைதானத்தை அடைந்து டிக்கட்!! எடுத்து விட்டு (இதென்ன புதிய பழக்கம்) ஒரு வாறு ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்தோம். நாம் என்ன வி.ஐ.பி எரியாலயா உட்கார்ந்திருப்போம்… வெளியில் இருந்த கொங்ரீட் படிக்கட்டுதான் நம்ம இருக்கை.

இங்கு வந்ததுதான் புரிந்தது வீட்டில் பார்ப்பதே சிறந்தது என்று.. வேறென்ன… ஒன்றுமே சரியாக தெரியவில்லை. எல்லோறும் சிறிது சிறிதாக தெரிந்தனர். (ஊர்ல தென்னந்தோப்புல விளையாடியவநெல்லாம் சர்வதேச மைதானத்துக்கு போனால் அப்படித்தான் இருக்கும்)     இப்பொதுபோல் பெரிய டிஜிட்டல் திரைகள் அப்போது இருக்கவில்லை (நீ எடுத்து 10/= டிக்கட்டுக்கு உட்கார இடம் கிடைத்தே பெரிய விடயம்.. டிஜிட்டல் திரை வேறு கேட்குதா)
எல்லோரும் பயங்கரமாக கத்திக் கூத்தாடும் போது எதோ முக்கியமாக நடந்து விட்டது தெரிந்து நாமும் சேர்ந்து பயங்கரமாக (நீ சிரித்தாலே அப்படித்தானே  இருக்கும்) கூத்தாடுவோம். பின்பு என்ன நடந்தது என்று score board`ஐ பார்த்து "என்ன நடந்தது?" தெரிந்து கொள்வோம். கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தால் நியூஸிலாந்து 140 ரன்கள் அடித்து இருந்தது.

(மைதானம் திறந்த புதிதில் 140 ரன்கள் அடிப்பதே பெரும் பாடாக இருந்தது. கடைசியாக நடந்த போட்டியில் அப்ரிடி அடித்த அடியை பார்க்கும் போது இது தம்புள்ள மைதானம்தானா? என்ற சந்தேகம் வந்தது.)
இந்த மைதானத்துக்கு இன்னுமொரு சிறப்பம்சம் உண்டு, ஆனால் அதை அநேகமானோர் அறிய மாட்டீர்கள். அந்த விபரம்... மற்றும் தொடர்ச்சி.. 
தொடரும்... 


Monday, 23 August 2010

விளையாட்டுப் போட்டியும் மாங்காய் மரமும்…

நமது பாடசாலையில் இரு வருடத்துக்கு ஒரு முறை விளையாட்டுப் போட்டி நடப்பது வழக்கம் (இது உங்க பாடசாலையில் மாத்திரமா நடக்குது). இக்காலங்களில் நம்ம பசங்களுக்கு கொண்டாட்டம்தான். இந்த நாட்களில் நாம் நம் அணிகளுக்கு விளையாடுவதை தவிர வேறு எல்லா வேலையும் செய்வோம். (நீ எப்பவுமே அப்படித்தானே..)  
ஒரு முறை விளையாட்டுப் போட்டி நடக்கும் காலம் நமது வீட்டின் கீழிருந்த தோட்டத்தில் ஒரு மாங்காய் மரம் காய்த்து குழுங்கிகொண்டிருந்தது. காய்த்த மரத்துக்கு கல்லடி படா விட்டால் பழ மொழி பிழையாகிவிடும் என்பதால் தமிழை வளர்க்கவாவது அத்தோட்டத்தில் உள்ள மாங்காய்களை ஆட்டயப் போடலாம், என நம் நன்பர்கள் குலாமில் (நான், பொப், டட்ஸன், க்ரேஸி, ராஜா) முடிவானது.

இதை எப்படி அமுலாக்குவது என்று யோசித்த போது மாலையில் பாடசாலையில் நீளம் தாண்டுதல் போட்டிக்கான பயிற்சி நடை பெறுவதாக செய்தி கிடைத்தது. இதை சாக்காக வைத்து வீட்டில் இருந்து, நீளம் தாண்டுதல் போட்டிக்கான பயிற்சிக்காக போவதாக சொல்லி விட்டு வெளியேறி ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தோம். அஙிருந்து பாடசாலை மைதானத்துக்கு போய் கொஞ்ச நேரம் பிலிம் காட்டிவிட்டு மைதானத்துக்கு பின்னாலிருந்த புதர் வழியாக ஒவ்வொருத்தராக யாருக்கும் சந்தேகம் வராத படி வெளியேறினோம்.

கொஞ்ச தூரத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாங்காய் மரத்தடியை அடைந்தோம். ஏற்கனவே முடிவு செய்த படி கல் மற்றும் கட்டைகளை பாவித்து மாங்காய் பரிக்க தயாரான போது, நம்ம க்ரேஸி, தான் மரம் ஏறுவதில் கில்லாடி என்றும், இதை போல் பல ”ஜல புல ஜல புல ஜங்” வேலைகளில் அவனுக்கு அனுபவம் இருப்பதாகவும் சொன்னான் (விதி வலியது..யாரை விட்டது….) நமக்கு நம்பிக்கையூட்ட இன்னும் பேசிகொண்டேயிருந்தான். கடைசியில் என்ன நடந்தால் நமக்கென்ன… மாங்காய் கிடத்தால் போதும் என்றெண்ணி அவனை மரத்தில் ஏற அனுமதிக்கப் பட்டது.

ஏறும் போது ஒரு அனுபவமிக்க திருடனை போன்று நன்றாகத்தான் ஏறினான்.(ஙொய்யாலா… எத்தனை மரங்கள், எத்தனை கோழிகளை ஆட்டய போட்டிருப்பான்) அவன் கிளைகளை குலுக்க குலுக்க விழும் மாங்காய்களை நாம் ஒன்று சேர்க்கத்தொடங்கினோம்.

அப்பொழுதுதான் அந்த கெட்ட சம்பவம் நடந்தது. ”தொப்” ”தொப்” என்று மாங்காய் விழும் சப்தத்துக்கு மத்தியில் “தொப்”பென்று ஒரு பெரிய சத்தமும் பின் முனகல் சத்தமும் கேட்கத் தொடங்கியது. சத்தம் வந்த திசையை பார்த்தால் நம் ஆருயிர் நன்பனும் அனுபவமிக்க மாங்காய் திருடனும், கொஞ்ச நேரத்துக்கு முன் மரத்துக்கு மேலுமிருந்த்த மரத்தடியில் மாங்காய்களுக்கு மத்தியில் க்ரேஸியின் சட்டை விழுந்து கிடக்கிறது. முனகல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் விழுந்த சட்டைக்குள் ஙொய்யால அவனும் இருக்கிறான்.(ஸாரிங்க… மாங்காய் பொறுக்கிய அவசரத்தில் சரியாக பார்க்கவில்லை)

நமக்கு காலும் ஓடவில்லை கையும் ஓடவில்லை(நாய்க்குத்தான்யா நாலும் ஓடும்). என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் போய் சொன்னால் அங்கே நடக்கப் போகும் நிகழ்வு இதை விட மோசமாக இருக்கும். கொஞ்ச நேரம் மூளையை!!! பிளிந்து யோசித்ததில் நன்பனும் நம் குழுவின் தலைவனுமான “பொப்” இன் கிரிமினல் மூளையின் எங்கோ ஒரு மூலையில் ஒரு யுக்தி முளைத்தது. அது கொஞ்சம் ரிஸ்க்`ஆக இருந்தாலும் நமக்குத்தான் அது ரஸ்க் சாப்பிடுர மாதிரியாச்சே….(செய்வதற்கு வேறு வழியும் இல்லை யோசிக்க நேரமும் இல்லை)

உடனே அதை அமல் செய்யும் பொருட்டு க்ரேஸியை தூக்கிக்கொண்டு பாடசாலை மைதானத்துக்கு ஒடினோம்(மாங்காயையும் மறக்கவில்லை). நல்ல வேளை அங்கு யாரும் இல்லை. போட்ட திட்டத்தின் படி அங்கிருந்த நீளம் தாண்டும் போட்டிக்கான இடத்தில் க்ரேஸியை அப்படியே போட்டுவிட்டு மாங்காய்களை மறைவான இடத்தில் வைத்து விட்டு வீட்டுக்கு ஓடிப்போய் ”க்ரேஸி நீளம் தாண்டுதல் பயிற்சியின் போது விழுந்து விட்டதாகவும் (காலில் மட்டும்தான் பலமாக அடிபட்டிருந்தது என்பதால் ரொம்ப வசதியாக!!! போய் விட்டது) உடனே வருமாறும் அழைக்க, வீட்டார்களும் ஓடோடி வந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். நாமும் கவலையுடன் (இவ்வளவு நன்றாக மரமேறுபவனை இழந்துவிட்டோமே.. இனிமேல் யார் மரமேறுவது????? ) இருந்த மாங்காய்களை பங்கு பிரித்து விட்டு வீடு போய் சேர்ந்தோம்.
அடுத்த நாள் பாடசாலை முழுவதும் க்ரேஸி விளையாட்டுப் பயிற்சியின் போது விழுந்து அடிபட்ட சம்பவம் அறிந்து முழு பாடசாலையும் சென்று அஞ்சலி செலுத்தியது.… ஸாரி…. இன்னும் உயிருடந்தான் இருக்கிறானில்ல,…….. சுகம் விசாரித்தது.
விளையாட்டுப் போட்டி முடிவின் போது நன்பனின் தன் இல்லத்துக்காக!! அவன் எடுத்த கடும் முயற்சியை பாராட்டி கௌரவப் பரிசொன்றும் வழங்கப் பட்டது. க்ரேஸி காலில் கட்டுடன் போய் பரிசு வாங்க அதை தூரத்தில் இருந்து கலங்கிய கண்களுடன் பார்த்து ரசித்தோம். இதற்கு முழு உதவியாயும் காரணமாயும்  இருந்த நமக்கு ஏதும் கிடைக்கவில்லை என்பது கவலையே..(நோ… நோ…. நோ.. bad words…) 

Friday, 20 August 2010

"ஸ்ரீ பாத" போன கதையும் அது சிரிப்பான கதையும் பாகம் II

கோலாகலமாக ஆரம்பித்த சுற்றுலா


முந்தைய பதிவை படிக்க http://faaique.blogspot.com/2010/08/40.html

நம்ம நன்பன் பொப் 2007ம் வருடத்தின் மார்ச் மாதம் இந்த மலைக்கு  போகலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்தான். நான் முதலில் முடியாது என்றுதான் சொன்னேன் ( நீ கேனயன் என்பது உனக்கே கன்போர்ம்`ஆ?) . அனாலும் நன்பர்கள் விடவில்லை. என் கன்னி மனதை கண்ணியை காட்டி கன்னி வைத்துவிட்டனுங்க… கடைசியில் நானும் போவதாக முடிவெடுத்தேன். (உனக்கு இதை விட்டால் வேறு என்னையா வேலை.. சும்மா எதுக்கு பில்ட் – உப் குடுக்குற)  நான், பொப், க்ரேஸி, , முன்ஸில், அசின் ( stop imagination..அது நம்ம நன்பன்) மற்றும் கிளவுட் என நன்பர் பட்டாளம் ஒன்று சேர்ந்த்து போக முடிவெடுத்தால் வாகனக் கூலி நம்ம பல்சை எகிற வைத்தது. பட்ஜெட்`ஐ பல பக்கங்களிலும் உதைத்தால் அதை சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது, இதற்கு தீர்வாக நம்ம பொப்பின் பக்கத்து வீட்டில் இருந்த இருந்த இரு சிங்களப்பையன்களையும், ஊரில் வேலை வெட்டி இல்லமல் திரிந்த சிலரையும் (நீ மட்டும் உலக வங்கியிலா வேலை செய்கிறாய்) சேர்த்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது (நம்மளையும் இந்த லிஸ்ட்`டில்தான் சேர்த்திருபானுங்களோ!!) . கடைசி நேரத்தில் க்ரேஸியின் உறவுக்கார பையன் ஒருவனும் வந்து சேர்ந்து கொண்டான்.
 சரியாக ஒரு நல்ல நாள் குறிக்கப்பட்டு (அதெல்லாம் நல்ல விடயங்களுக்கு செய்வது..சரி விடு… ) எல்லா ஏற்பாடுகளும் (வேறு என்ன? சாப்பாடுதான்..) செய்யப்பட்டது. பொப் சரியாக நான்கு மணிக்கு வண்டிக்கு வரச்சொல்லி இருந்தான். வண்டிகாரன் சொன்னது போல் மாலை 5.30 க்கெல்லாம் வந்துவிட்டான். வண்டிக்காரன் சிங்களவன் என்பதால் தெரிந்த கெட்ட வார்தையால் எல்லம் திட்டி விட்டு (தமிழில் மட்டும்தான்) பிரயாணத்தை ஆரம்பித்தோம் (ஆரம்பமே கலக்கல்).
போகும் வழியில் ஓரிடத்தில்..  

பாட்டும் கூத்தும்மாக ஆரம்பித்த பயணம். எவ்வளவு இயலுமோ அவ்வளவு எல்லா பாடல்களும் கொலை செய்யப்பட்டது ( பயபுள்ளக……விளம்பரத்தில் வரும் பாடல்களை கூட விட்டு வைக்கவில்லை) வழியில் ஓரிடத்தில் நிறுத்தி இரவு சாப்பாட்டை சாப்பிட்டு விட்டுமீண்டும் பிரயாணம் ஆரம்பித்தது. (அங்கேயே தூங்கவா முடியும்)
வழியில் வண்டியின் டயரில் ஆணி துளைத்ததால் டயர் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. நம்ம வண்டிக்காரனிடம் டயர் மாற்றுவதற்கான எந்த உபகரணமும் இல்லாததால் மறுபடியும் அவனுக்கு கெட்ட வார்த்தைகளால் (இப்போதும் தமிழில் மாத்திரமே) அபிஷேகம் செய்யப்பட்டது (அதே கெட்ட வார்த்த.. பாரபட்சம் பார்க்காம திட்டினாணுக... அவனுக்கு தமிழ் தெரிந்திருந்தால் நமக்கு கருமாதி பண்ணியிருப்பான் அல்லது அங்கேயே ஏதாவது ஒரு கிணற்றை தேடி குதித்திருப்பான்) பின்பு வந்த சிங்களப் பையன்கள் வந்த ஒரு வாகனத்தை உதவி கேட்ட போது அவர்களே டயரை மாற்றியும் தந்தனர்.  
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் 

மீண்டும் பயணத்தை ஆரம்பித்து இரண்டு சோதனைச் சாவடிகளையும் கடந்து சென்ற போது நம்மிடமிருந்த கத்தி போன்ற உபகரணங்களை கேட்டு வாங்கிக்கொண்டனர் (நம்ம முகத்தை பார்க்கும் போதே நாங்கெல்லாம் பெரிய ரவுடிகள் என்பது தெரிந்திருக்குமோ!!!) . நம்மிடம் இருந்தும் இல்லை என்று சொல்லி விட்டோம். மலைக்கு ஓரளவு அருகில் வந்ததும் வாகன நெரிசலினால் மிக நீண்ட நேரம் காத்துக்கொண்டு இருக்க வேண்டியதாயிற்று.

சொந்த வாகணங்கள் நல்லதண்ணி எனும் ஊர் வரையே போக முடியுமென்பதால் (நீ அடுத்தவன் வண்டிலதானே போனாய்) அங்கே வாகனத்தில் இருந்து இறங்கி பயணிகள் சேவைக்கென அமர்த்தப்பட்ட பஸ்ஸில் போக வேண்டியிருந்தது. நாம் பன்னிரண்டு பேர் வரை இருந்தாலும் பட்ஜெட்`டின் நலன் கருதியும் பொதுச் சொத்து எங்கள் சொத்து என்பதாலும் ஆறு பேருக்கெ டிக்கெட் எடுக்கப்பட்டது. பஸ் நடத்துனர் நன்றாக குடித்திருந்தார். இதை பார்த்து விட்ட நம்ம பசங்க ”ஆஹா ஊரு பேரும் ”நல்ல தண்ணி” நடத்துணரும் ”நல்ல தண்ணி” என்று கலாய்க்க ஆரம்பிக்க பஸ் மலையை நோக்கி புறப்பாட்டது.

பதினைந்து நிமிடத்தில் மலை அடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து இன்னும் 7-9 கி.மி போக வேண்டும் என்ற அறிவிப்பு பலகையும் அப்படியே மலையையும் பார்த்தவுடன் கிலி பிடித்தது. இருந்தாலும் பெண்களும், வயதாளிகளும், குழந்தைகளும் ஏறுவதை பார்த்தவுடன் நமக்கு முடியாதா? என ஏறத்தொடங்கினோம்.

(இங்கு நடை பாதயில் விற்கப்படும் “படையப்பா சுருட்டு” எனப்படும் பெரிய சுருட்டு மிகவும் பிரபலமானது - புகைத்தல் தற்கொலைக்கு சமம்  )

ஏறத்தொடங்கியதும் பாட்டும் கூத்துமாக ஆரம்பித்த நம்ம பசங்க மேலே செல்லச் செல்ல சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறிது நேரத்தில் பெரும் ஒப்பாரியாக மாறியது. கொஞ்ச தூரம் சென்றவுடன் next-Rest எவனாவது ஒருத்தன் கீழே குந்தி விடுவான். பிறகு எல்லோருமாக கொஞ்சம் களைபாறிவிட்டு மீண்டும் ஆரம்பிப்போம் கொஞ்ச தூரம் சென்றவுடன் சொல்லிவைத்தாற் போல இன்னும் எங்கிருந்தாவது next-Rest என ஒரு சத்தம் வரும். பிறகென்ன?.... நம்மை நிறை மாத கர்பிணிப்பெண் முந்திச் சென்றாள். சிலர் தன் 3 வயது 4 வயது குழந்தையை தூக்கிகொண்டு நம்மை முந்திச் சென்றனர். சில குழந்தைகள் முந்திச் சென்றனர். ஒரு கால் இல்லாத வெளி நாட்டவர் நம்மை முந்திச் சென்றார். அறுபதுக்கும் மேற்பட்ட வயதுடையோரும் நம்மை முந்திச் சென்றனர். நமக்கு மட்டும் ரோஷம் என்பதே இல்லாமல் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தோம்.
Next -Rest

வழி நெடுகிழும் பக்தர்களுக்கென ஓய்வெடுக்க கதிரைகளும் மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதி ஒன்றை கூட விடாமல் தங்கியதும் ஓய்வெடுத்ததும் நாமாகத்தான் இருக்கும். கீழே பத்து ரூபாய்க்கு கிடைக்கும் தேனீர் மேலே செல்ல செல்ல விலை கூடிக்கொண்டே செல்லும். அதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வளவு தூரம் பொருட்களை சுமந்து செல்வது என்பது இலகுவான காரியம் அல்ல.

ஒருவாறு காலை 3 மணியலவில் மலை உச்சியை நெருங்கினோம். எனக்கோ பயங்கர சந்தோசம். நான் நினைக்கவில்லை, இந்த வேகத்தில் வந்த நாம் சூரியோதயத்திற்கு முன் மலை உச்சியை அடைவோமென்று.. அப்போது கொஞ்சம் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கலாமென ஒரு கடையில் ஒதுங்கினோம். அங்கு நன்பன் க்ரேஸியும் அவன் உறவுக்கார பையனும் நாம் இங்கே தங்கிவிடுகிறோம். நீங்கள் போய் வாருங்கள் என கெஞ்சியும் நாங்கள் அவர்களையும் கூட்டி சென்றோம். (விதி வலியது.. யாரை விட்டது)
Next - Rest மறுபடியும்.. 

இன்னும் கொஞ்சம் ஏறி மலையின் உச்சியை நெருங்கிய போது கொஞ்சம் பொழுது புலப்பட தொடங்கியது. இதுவே நமக்கு ஆப்படிக்கும் என நினைத்தும் பார்க்கவில்லை. வெளிச்சம் வர வர நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் எவ்வளவு செங்குத்தான மலை சரிவில் ஏறிக்கொண்டிருக்கிறோம் என விளங்கியது. (மலை உச்சியை நெருங்கும் போது மலையின் சரிவு கிட்டத்தட்ட 75 டிகிரியில் அதிகரிக்கும்) இதைப் பார்த்தவுடன் நன்பன் க்ரேஸி அங்கேயே மயங்கி சரிந்தான். இதைப் பார்த்த எல்லோருக்கும் வயிற்றில் புளி கரைத்தது. க்ரேஸியை ஒரு பாதுகாப்பான இடத்தில் உற்கார வைத்து விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
Next - Rest .......60506 வது முறையாக ....

அனைவருடைய ஏகோபித்த முடிவின் படி நம்முடன் வந்த சிங்களப் பசங்க இருவரையும் மேலே அனுப்பிவிட்டு (நமக்கு இது வெறும் சுற்றுப்பயணம் அனால் பௌத்தர்களுக்கோ இது புனித யாத்திரை) நாம் க்ரேஸியை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டு கீழே இறங்கத் தொடங்கினோம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதான். 9 கி.மி தூரத்தில் 8.5 கி.மி வரை ஏறியிருப்போம். இருந்தும் விதி விளையாடி விட்டது. மேலே சென்று வந்த சிங்கள நன்பர்களிடம் மேலே நடந்ததை நன்றாக கேட்டுக் கொண்டோம் (வீட்டில் போய் சொல்ல வேண்டுமே…) இன்றுவரை இந்த தேர் திரும்பிய கதை நம்மளை தவிர யாருக்கும் தெரியாது.( இப்போ மொத்தமா எல்லோருக்கும் சேர்த்து ஆப்பு வெச்சிட்டோமுள்ள..)
எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. 

நாம் இங்கு சென்ற வேளை டிஜிட்டல் கெமரா நமக்கு அறிமுகமான புதிது. க்ரேஸியின் அண்ணன் வெளிநாட்டில் இருந்து 6 mega pixel Canon camera அனுப்பியிருந்தான். அதை எடுத்து வந்த க்ரேஸி rechargeable batteryயை மறந்து விட சாதா battery உபயோகிக்க வேண்டியதாயிற்று. அதில் போட்டோ எடுப்பது யானைக்கு கட்டி தீனி போடுவதை விட கொடுமை. இரவில் சென்றதால் night mode  எடுக்கத் தெறியாததால் எல்லா போட்டோக்களும் மங்களாகவே வந்தது (அதுவும் நல்லதாயிற்று). இது தெரியாமல் வீட்டுக்கு வந்து போட்டொவை பார்த்து விட்டு போட்டோ எடுத்தவனை கும்மு கும்மு என்று குமுறினோம்.
வரும் வழியில் நன்பன் க்ரேஸிக்கு வீட்டில் இருந்து அவசரமாக!!! வரும் படி தொலைபேசி அழைப்பு வர வழியில் இறங்கி விட்டான். தப்பிவிட்டான் இல்லவிட்டால் அவனுக்கும் கும்மாங்குத்து நிச்சயம்…..
வரும் போது கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து வரும் மகாவெளி கங்கையில் குளித்து விட்டு (ஹி…ஹி…. அனை மூடியிருக்கும் போது) வீடு வந்து சேர்ந்தோம். 

Thursday, 19 August 2010

"ஸ்ரீ பாத" போன கதையும் அது சிரிப்பான கதையும்


சமனல கந்த (வண்ணத்துப்பூச்சி மலை)  எனப்படும் இந்த மலை இலங்கையில் தென் பீட பூமியில் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி நகரில் இருந்து 40 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. 2,243 மீட்டர் உயரம் கொண்ட இலங்கையின் இரண்டாவது உயரமான கூம்புருவான மலையாகும். சுற்றியும் மலை சூழ்ந்த இடமாயினும் இந்த மலை தனித்து தெரியும் அளவுக்கு உயரமானது. சுற்றியும் காடு அடர்ந்து காணப்படுகிறது மற்றும் இங்கு யானை சிறுத்தை மற்றும் இலங்கைக்கு தனிச்சிறப்பான பல விலங்குகளும் தாவரங்களும் அடங்குகின்றன.
உற்றுப் பார்த்தால் பக்தர்கள் ஏறுவதுதெரியும் 

இந்த மலையை அனைத்து மத மக்களும் புனித ஸ்தலமாக கொண்டாடுகின்றனர். காரணம் இந்த மலையின் உச்சியில் உள்ள 1.8 மீட்டர் பெரிய கால் சுவடாகும். புத்தர்கள் புத்தருடையுது என்றும் ஹிந்துக்கள் சிவனுடையது என்றும் முஸ்லிம்கள் மற்றும் கிரிஸ்தவர்கள் இது முதல் மனிதரான மற்றும் இறை தூதரான ஆதம் (Adam) உடையது என்றும் நம்புகின்றனர். இதனால் புத்தர் ”ஸ்ரீ பாத மலை” என்றும் ஹிந்துக்கள் “சிவனொலிபாத மலை” என்றும் முஸ்லிம் ”ஆதம் பாவா மலை” என்றும் ஆங்கிலத்தில் “Adams Peak” என்றும் அழைக்கப்படுகிறது.

மலையின் உச்சியை அடைய ஆறு முக்கிய பாதைகள் உள்ளன. அவையாவன  இரத்தினபுரி – பலாபத்தள, ஹட்டன் – நல்லதண்ணி (இந்த ஊரை பற்றி ஒரு முக்கிய சம்பவம் பின்னே வரும்.), குருவிட்ட – ஏறத்ன, முர்ரய்வத்த, மூக்குவெத்த & மாலிம்பொட ஆகியனவாகும். இதில் நல்லதண்ணி, பலாபத்தல வீதிகள் பிரபலமானவையாகும். பஸ் வண்டிகள் ஹட்டனிலிருந்து நல்லதண்ணி வரையும் இரத்தினபுரி வரையும் குருவிட்டயிலிருந்து ஏரத்ன வரையும் வரும். இந்த இடங்களில் இருந்து காட்டினூடு கரடு முரடான பாதையில் ஒழுங்கற்ற படிகளிலும் 7- 9 கி.மி ஏற வேண்டும். இதில் நல்லதண்ணி பாதை மிகவும் பிரபலமானது. இது கொஞ்சம் தூரமாக இருந்தாலும் பாதை சரிவு குறைந்ததாகவும் இலகுவாகவும் இருக்கும்.
முக்கோண வடிவ நிழல் விழும் காட்சி  

பொதுவாக ஹிந்துக்களும் பௌத்தர்களுமே இங்கு போவதை வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதுகின்றனர். பொதுவாக யாத்திரீகர்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை படையெடுக்கின்றனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட சீரற்ற படிகளையும் கடும் மழை, குளிர் காற்று மற்றும் பனியில் ஏறி மலையின் உச்சியை அடைவது என்பது ஒரு ரிஸ்கான வேலையாகும்.

செங்குத்தான குறுகிய மலைப்பாதை. 
இங்கு வருவோரின் முக்கிய நோக்கம் இந்த மலையின் உச்சியில் இருந்து சூரியோதயத்தை பார்ப்பதாகும். முன்பே சொன்னது போல் இந்த மலையின் பக்கத்தில் உள்ள மலைகள் எதுவும் இதன் அளவுக்கு உயரம் இல்லாததால் சூரியோதயத்தை இதிலிருந்து பார்ப்பதும் இம்மலை கூம்புருவாக இருப்பதால் சூரியோததின் போது இதன் பிரமாண்டமான முக்கோண வடிவ நிழல் மேற்குப்பக்கத்தில் விழுவதை பார்ப்பதும் ஒரு தனி அனுபவம்தான். அதற்காக இங்கு வருவோர் இரவிலே ஏறத்தொடங்குவார்கள். அப்போதுதான் காலையில் மலையுச்சியை அடைய முடியும்.

சூர்யோதயம்  

நமது ஊர்களில் ”இந்த மலைக்கு ஒரு முறையேனும் போகாதவனும் கேனயன், இரண்டாவது முறை போகின்றவனும் கேனயன்” என்பர். நாம கேனயன் இல்லை என்பதை மலையேறி நிரூபிக்க வேண்டியாகிவிட்டது. நமக்குதான் ரிஸ்க் எடுக்குரது ரஸ்க் சாப்பிடரது மாதிரியாச்சே.
நாளை மலை ஏறும் படலம் ஆரம்பம் ........
நாங்க ரெடி நீங்க ரெடியா?


தொடர்வதற்கு http://faaique.blogspot.com/2010/08/ii.html

Monday, 16 August 2010

ஓவர் பில்ட் – அப் உடம்புக்கு ஆகாது…….

நம்ம  கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அதாங்க.. சூரியனுக்கே டார்ச் அடிப்பவர்) ஒரு பதிவில் “மீனே தனக்கு மசாலா தடவிக்கொண்டு எண்ணையில் குதிப்பது” என்பார். அது போல என் நன்பனுக்கு ஒரு சம்பவம் நடந்தது. ஆப்பில் தெரியாமல் போய் உட்காருவது வேறு, ஆப்பை எடுத்து தனக்கே செருகிகொள்வது வேறு. நன்பனுக்கு நடந்தது இரண்டாவது வகை.

என் நெருங்கிய நன்பர்களில் ஒருவன் பொப்(வழமை போல் பெயர் மாற்றப்பட்டுள்ளது). சொந்த ஊர் (சொந்தம் கொண்டாட ஊர் என்ன அப்பன் வீட்டு சொத்தா?) நுவரெலியா மாவட்டத்தில் இரம்பொட பகுதியில் உள்ள கட்டுகிதுல எனும் நகரமாகும். (கிராமம் என்று உன்மையை எழுதினால் அந்த ஏரியால தலை காட்ட முடியாது என்பதால் அதுவும் மறைக்கப்பட்டுள்ளது)

நாம் அவனை சந்திக்க அடிக்கடி அங்கு செல்வதுண்டு(ஏன் அவர் வர மாட்டாரா என்றெல்லாம் கேட்க கூடாது, நாம சிங்கத்தையே அதன் குகைக்கு சென்று சந்திக்கிற ஆளுங்க… இதெல்லாம் ஜுஜூபி மேட்டரு…)

நம்ம நன்பன் க்ரேஸி (ஹி…ஹி.. இவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது…… உருப்படியாக ஏதாவது செய்தால் சொந்தப் பெயரில் எழுதலாம்..) ஒவ்வொரு முறையும்!!!! காதலில் தோல்வி அடையும் போது அங்கு சென்று பீல் பண்ணி அழுது அடுத்தவனின் தூக்கத்தை கெடுத்து அந்த கெப்`பில்(gap) அவன் நல்லா தூங்கி விட்டு அடுத்தவனை சாப்பிட விடாமல் அதையெல்லாம் அவன் சாப்பிட்டு விட்டு வருவான் (இது ஒவ்வொரு மாதமும் கட்டாயம் இது நடக்கும்)

நாம் ஒரு முறை அங்கு சென்ற போது, ஒரு மாலை வேலை பொப் வீட்டுக்கு வந்த முன்ஸில் (அட.. இவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது காரணம் இவர்தான் கதையின் நாயகன்) தன் வீட்டுக்கு வருமாறு விடாப்பிடியாக இருந்தான் (நம்புங்கப்பா…). நாமும் சும்மா கிடைக்கும் தேனீர் மற்றும் பிஸ்கட்`ஐ ஏன் விட வேண்டும் (விடுவோமா நாங்க….) என்று யோசித்து போவதென முடிவெடுத்து வெளியே வந்தோம்.

வாசலின் அருகே வரும் போது தேயிலை தோட்டத்தில் (வாசலின் அருகே எப்படியா தேயிலை தோட்டம் இருக்கும்) வேலை செய்யும் இரு பெண்கள் நன்பன் பொப்பின் தந்தையின் கடைக்கு வந்து விட்டு சென்றனர்.(வந்தா போகத்தானே வேனும்….ஷப்ப்பா…….) நாம் இன்னொரு நன்பனுக்கு ஒரு 5 நிமிடம் காத்திருந்து விட்டு வெளியே வரும் போது நன்பன் முன்ஸிலின் காந்த கண்ணில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு கண்ணில் பட்டுவிட்டது. இதை பார்த்தவுடன் நம் ஒவ்வொருத்தரது மனதிலும் கொத்து பரோட்டா, சமூசா என்று பல ஐட்டங்கள் கொசுவத்தி சுருள் போல் சுற்றிக்கொண்டிருக்க நன்பன் முன்ஸில் மனதோ வேறு திசையில் சுற்றியது.

முன்ஸில் கூறியதாவது “இந்த பணம் கட்டாயம் அந்த தோட்டத்து பெண்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். நாள் முழுதும் வேலை செய்து விட்டு போகும் போது விட்டு சென்றுள்ளனர். இது அவர்களின் ஒரு நாள் சம்பளமாக இருக்க வேண்டும்………etc..(மலையக மக்கள் முன்னனி அரசியல்வாதிகளே நோட் பண்ணுங்கப்பா…..) என்று செண்டிமெண்டாக பேச நம் கண்களில் கிளிசரின் இல்லாமலே கண்ணீர். (ரொம்ப நல்லவனா இருக்கானே!!! நம் நன்பர்களில் இப்படி ஒருத்தனா? சான்ஸே இல்லயே!!!)

நாம் முன்ஸில்`இன் பேச்சை கேட்டு பீல் பண்ணிக்கொண்டு போதே, இதை அவர்களிடம் குடுக்காமல் திரும்ப மாட்டேன் என்று சபதம் செய்து விட்டு அப்பெண்கள் சென்ற திசையில் ஓடி மறைந்தான். நமக்கோ வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஐம்பது ரூபாய் ஜஸ்ட் மிஸ் ஆகிய கவலையிலும் இருந்து மீள ரொம்ப நேரமானது.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு பின் களைப்புடன் (ஓடிப்போய் வந்ததால்) திரும்பிய நன்பன் முன்ஸிலின் கண்களில் ஆனந்த கண்ணீர். இவர் பணத்தை ஒப்படைத்த போது அவர்கள் பட்ட சந்தோசத்தை சொல்லி எங்களையும் மெய்சிலிர்க்க வைத்தான். நம் நன்பனின் பெரிய மனதை எண்ணியவாறும் நம் கையில் கிடக்கவில்லையே என்ற வயிற்றெரிச்சலிலும் நன்பன் முன்ஸில்`இன் வீட்டின் முற்றத்தை அடைந்தோம்.

தன் வீட்டு கதவை திறக்க சென்றவன் அப்படியே நின்று கொண்டு யோசிக்கத் தொடங்கினான். முகத்தில் ஆயிரம் கேள்விக் குறிகள் இருளிலும் மின்னியது!!!!. என்னவென்று விசாரித்தால் சொல்ல மறுக்கிறான். பலமுறை கேட்டு நச்சரித்த போது (விடுவோமா நாங்க..) “அம்மா வீட்டுக்கு சாமான் வாங்கச் சொன்னதாகவும் அதற்கு தந்த ஐம்பது ரூபாயை காணவில்லை”யென்றும் சொல்ல நமக்கு உண்மை கொஞ்சம் கொஞ்சமாக புலப்பட தொடங்கியது.

அங்கு விழுந்து கிடந்தது நன்பனின் முன்சிலின் ஐம்பது ரூபாயாகும். அதைத் தெரியாத முன்சில் தன் சொந்த பணத்தயே அந்த தோட்டக்கார பெண்களிடம் கொடுத்து வந்துவிட்டான். சும்மா கொடுத்து விட்டு வந்திருந்தாலும் பரவாயில்லை. கொடுத்ததும் இல்லாமல் பயபுள்ள என்னா பில்ட் உப்? விட்டான். இதை தெரிந்ததும் நாங்கள் விழுந்து!! விழுந்து!! சிரிக்கவில்லை என்றால் நீங்க நம்பவா போரீங்க….

நிலவரத்தின் தன்மை அறிந்து வீட்டில் உள் சென்றால் முன்ஸிலுக்கு நடக்கப் போகும் கலவரத்தை தெரிந்ததாலும் எல்லாரும் தன்னிடம் இருந்த கொஞ்ச பணத்தையும் போட்டு  (வெறும் ஐம்பது ரூபாய்`க்கா)அவனுடைய நிலமையை சீராக்கி மீண்டும் கடையை நோக்கி நடந்தோம்.
     

Friday, 13 August 2010

திருமணத்தில் போன மானம்........மனிதனாக பிறந்த எவரும் பல்பு  வாங்காமல் இருப்பதில்லை.(ஆஹா… நம்மளுக்கும் தத்துவம் நல்லா? வருதே!.. நோபலுக்கு பரிந்துரை செய்ங்கப்பா!) அனாலும் சிலரிடத்தில் அல்லது சில இடங்களில் வாங்கியவை வாழ்க்கையிலேயே மறக்க முடிவதில்லை(வாங்குறதே பல்பு, அதை எங்கு வாங்கினால் என்ன? யாரிடம் வாங்கினால் என்ன?). அப்படி ஒரு விடயத்தை பற்றியே எழுதப்போகிறேன். (அப்பாடா… விஷயத்துக்கு வந்தாச்சு….)
எனக்கும் என் நன்பன் Dutsunக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு பொது நன்பன் கம்பளை எனும் ஊரில் இருந்தான். ஒரு நாள் அவசரமாக தொலைபேசியில் அழைத்த Datsun, நம் நன்பனின் தங்கைக்கு திருமணம் என்றும் நாம் இருவரும் அழைக்கப்பட்டிருப்பதாகும் சொன்னான். (சாப்பாடு………..விடுவோமா நாங்க…). நானும் சரியென்று திருமணம் நடக்கும் திகதியை கேட்டுக்கொண்டேன் ஆனால் இடத்தை பற்றி அவ்வவாக கேட்கவில்லை, (வேண்டியது “சோறு…” அதை எங்கு போட்டால் என்ன?) காரணம் அந்த ஊர் எனக்கு அவ்வளவாக தெரியாது. dutsunக்கு அந்த ஊரில் உறவினர் இருப்பதாலும் அவன் அங்கு போய் வருவதனாலும் நம்மிடம் எதோ talking & Walking GPRS`ஏ இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

திருமண நாளும் வந்தது. நாங்களும் மணமகனுக்கு இணையாக!!! அலங்கரித்துக் கொண்டு (இதுக்கு மேலேயும் ஒரு அழகு தேவையா? என்றெல்லாம் கேட்கக்கோடாது) பஸ்ஸில் ஏறினோம். ஊரின் எல்லையை அடைந்ததும் Dutsun வண்டியின் ஜன்னலினூடு எதோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தான். காரணம் கேட்டபோது அவனுக்கும் திருமண மண்டபம் தெரியாதாம்!!.(பார்ரா..வில்லங்கத்தை ticket எடுத்து கூட்டி வந்திருக்கிறேன்) ஆனால் அந்த மண்டபம் மசூதியோடு சேர்ந்து இருப்பதாகவும், இந்த ஊரில் ஐந்து திருமண மணடபங்கள்தான் இருப்பதாகவும் அதில் ஒன்றுதான் மசூதிக்கு பக்கத்தில் இருக்கும் என்று நெஞ்சில் பாலை வார்த்துக்கொண்டிருக்கும் போதே மஸூதிக்கு பக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் கண்களில் பட்டது. உடனே இரங்கிவிட்டோம்.
 எல்லொரும் எங்களை ஒரு மாதிரியாக பார்த்தனர். நமக்கு நம் நன்பனை தவிர வேறு யாரையும் அங்கு தெரியாததாலும் நாம் கொஞ்சம் அழகாய் இருப்பதாலும்  (நம்புங்கப்பா…) அதை நாம் பெரிதாக நினைக்கவில்லை.(அழைக்காமலே எத்தனை திருமணத்துக்கு போய் இருப்போம்) ஆனால் நன்பன் மட்டும் கண்ணில் படவேயில்லை. பயபுள்ள உள்ளே (சமையல் கட்டில்தானுங்கோ!! நம்ம நன்பனாச்சே!!!) பயங்கர பிஸியாக இருப்பான் போல்… என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது நம்ம சகா dutsun, சாப்பாட்டு பந்தி ஆரம்பித்து விட்டதாகவும் பயங்கரமாக பசிப்பதாகவும் (இங்கு சாப்பிடுவதற்காகவே நாளு நாள் சாப்பிடாமல் வந்திருப்பான் போலும்.. ) முதலில் சாப்பிடுவோம் பின்பு தேடுவோம் என்று மனதை பிராண்டினான்.

நண்பனின் பேச்சை மீற முடியாததால்!!! மெதுவாக உள்ளே புகுந்து வசதியாக!! ஒரு இடத்தை பிடித்து அமர்ந்தோம். அனேகமானோர் நம்மளை குறு குறு என்று பார்த்தாலும் நாம் சாப்பாட்டை தவிர எங்குமே கவனத்தை சிதர விடாமல் காரியத்தில் கண்ணாய் இருந்தோம். வெளியே வரும் போது அனேகமானோர் கிளம்பியிருந்தாலும்!!! நம் நன்பனை மட்டும் காணவே இல்லை.
நம்மளுக்கும் மூளையில்!!(இருக்குப்பா...நம்புங்க...) எங்கோ பொறி தட்டியது.. அங்கு தடபுலாக வருவோரையும் வரவேற்றும் போவோரை வழியனுப்பிக்கொண்டிருந்த ஒரு பையனை ஒதுக்குப்புறமாக கூப்பிட்டு “இது நம் நன்பனின் பெயரை சொல்லி அவன் வீட்டு திருமணமா?” என்று கேட்க…. விட்டான் பாருங்க ஒரு ”லுக்கு”… (நோ…நோ… அழுதுருவேன்). ”யோவ்!! அந்த மண்டபம் அடுத்த தெருவில் இருக்கிறது. இது என் அண்ணனின் திருமணம்தான். வந்ததே வந்தாச்சு… சாப்பிட்டு போங்க” என்றான். நம்மளும் அசடு வழிந்து கொண்டே ”இல்ல பரவாயில்ல நாங்க அங்கே போயே சாப்பிடுகிறோம்” (நாளு ப்லேட் உள்ளே விட்டதை சொல்லவா முடியும்) என்று வெளியேறி அடுத்தவர்களும் நம் முகத்தை மனப்பாடம் பன்னும் முன் வந்த ஒரு ஆட்டோவில் ஏறி அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நன்பன் இருந்த திருமண மண்டபத்தை அடந்தோம்.ஆஹா அதுவும் மசூதிக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. (அதைப் பார்த்த நம்ம நன்பன் Dutsunனின் முகத்தை பார்க்கனுமே!!!)
மண்டபத்தின் வாசலிலேயே நம் நன்பன். நமக்கு பகீறென்ரது… (பந்தி முடிந்துவிட்டதோ….பயபுள்ள பந்தி முடியாம வெளியே வரமாட்டானே….!) நமக்கும் நன்பனுக்கும் நடந்த உரயாடல் வருமாறு……
நன்பன்: இப்போதா வருகிரீர்கள்?
நாம்:    ஆ……….. அ…ஆமாம்… Bus Late…
நன்பன் : இடத்தை கண்டு பிடிக்க கஷ்டமாக இருந்ததா?
நாம்:    சீச்… சீ… அப்படியெல்லாம் எதுவுமில்லை (நாளு ப்லேட் உள்ளே         விட்டிருக்கோமுள்ள…..) நன்பன் Dutsun எனும் GPRS இருக்கும் போது என்ன கஷ்டம்?
நன்பன்: சாப்பிட்டாச்சா?
நாம்:    அது… அது.. வந்து….. இன்னும் இல்ல……
நன்பன்: சீக்கிரம் வாங்க.. (சாப்பாட்டுக்கு எப்போதய்யா மெதுவாக வந்தோம்)
நாம்:   (சாப்பிட ஆரம்பிச்சா என்ன பேச்சு)
(நன்பனின் அன்பு கட்டளையை மீற முடியாததாலும் உப்பு, காரம் போன்றவை எப்படி இருக்கிறது என்று பார்க்க இன்னும் 2 ப்லேட் உள்ளே விடப்பட்டது)
கடைசியாக நடந்ததை கேட்டால் இதுவரை நடந்தது எவ்வளவோ பரவாயில்லை என்பீர்கள். அதாவது திரும்பி வந்ததும் நம்ம நன்பன் Dutsun ஒரு பெரிய்ய்ய்ய ஆப்பு ஒன்று வைத்தான், அதாவது ”திருமணத்துக்கு அழைத்ததே அவனை மட்டும்தானாம். என்னை சும்மா கம்பனிக்கு கூட்டிச் சென்றானாம்!!!!” (உன்னையெல்லாம் எவன்யா கூப்பிடுவான்?) ஆஹா… இது தெரியாமல் ஓவரா பில்ட் அப் (build-up) கொடுத்துட்டோமே! (கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வைக்கிறானுங்க…)

Wednesday, 11 August 2010

கடைசிப் பக்கம்


நம் பாடசாலை காலத்தில் பயிற்சி புத்தகங்களின் கடைசி பக்கங்களை யாரும் ஞாபகம் இருக்கிறதா? (நல்லா கேக்குறாங்கய்யா டீட்டைலு.. )   எப்படி மறக்க முடியும்? அங்கேதானே நாம் அனைவரும் கையொப்பமிட்டும், கவிதை!! (இப்போதுதான் புரிகிறது... நீ என் பரீட்சையில் சித்தியடையவில்லை என்று) எழுதியும் பழகினோம். இதற்கு யாரும் விதி விலக்கல்ல. சிலரது புத்தகங்களின் கடைசி பக்கம் பார்க்கவே சுவாரசியமாக இருக்கும் (அங்கெ என்ன கிரிக்கடா ஆடினீர்கள்?) . அதை இப்பொழுது பார்த்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.(கவனமாக பார்க்கவும்.. பழைய கல்லூரிக் கால வில்லங்கங்கள் வெளியாகி தங்மணிகளிடம் அடி வாங்கவும், பட்டினி கிடக்கவும் நேர்ந்த்தால் அதற்கு நஷ்ட ஈடு தரப்படமாட்டாது) சில குசும்புத்தனமான ஆசிரியர்கள் மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திடீரென சோதனை செய்வதுண்டு. அதில் மாட்டிக்கொண்ட களவுகளும், காதல் கதைகளும் ஏகப்பட்டவை உண்டு.
அப்பா பாடப்புத்தகம் வாங்க தந்த பணத்தை ஆட்டய போட்டுவிட்டு ஒரே கொப்பியில் பத்து பாட குறிப்புகளையும் எழுதி காலத்தை ஓட்டிய ஜகஜால கில்லாடிகளும் உண்டு (ஐயோ அது நானில்லப்பா நமக்கு நண்பர்களுடைய கொப்பி இருக்க பயமேன்)
நமது பௌதீகவியல் ஆசிரியர் வாசிகசாலையிலுள்ள புத்தகங்களையெல்லாம் அடுக்கிகொண்டு வந்து நமக்கு எழுதச்சொல்லியே காலத்தை ஓட்டுவார். அவ்வளவு குறிப்புக்கும் கொப்பி வாங்கி கட்டுப்பட்டியாகாது என்பதால் ஒரே வரி இடுக்கில் சின்ன எழுத்தில் மூன்று வரி எழுதி (என்னா வில்லத்தனம்) மாட்டிக்கொண்டு முழித்த அனுபவமும் உண்டு. (எவன்யா அது கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறது... கல்லூரி வாழ்கையில  இதெல்லாம் சகஜமப்பா... ) 
என் நன்பன் க்ரேஸி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கொப்பியின் பின் பக்கத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தான்.

              ”அரை மணித்தியால படிப்பு
              அதிலும் இரட்டை சிரிப்பு
              ஆசிரயரை கண்டால் நடிப்பு
              இதுதான் கல்லூரிப் படிப்பு”

(இந்த உன்னதக் கவிதை கணிதப் பாட ஆசிரியரிடம் மாட்டிகொள்ள, தர்ம அடி வாங்கியதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்!!!!! என்ன இருந்தாலும் என் நன்பனாச்சே!!!!!)
என் இன்னொரு நன்பன் பொப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் கொப்பியின் பின் பக்கத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தான்.

                “ஒரே பார்வயில் காதலா…..
                 ஒரு மூங்கில் காடெரிய
                 ஒரு தீக்குச்சி போதுமே….”

இது ஆசிரியையிடம் மாட்டிகொண்டு மானம் கப்பலேரியது தனிக்கதை.
இதைப்போல் உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும். கொஞ்சம் அசை போட்டுப் பாருங்கள். (நீ பட்ட அவமானம் போதாதா...?  நாம எதுக்கு...!!!! )
பயபுள்ள கேப்டனின் ரசிகனா இருப்பான் போலிருக்கு... 

ஒரு முறை தன்னை உதைத்த நன்பனின் சப்பாத்தை(shoe) கழட்டி இரண்டாம் மாடியில் இருந்து வீச நம் நன்பனும் பதிலுக்கு அவன் புத்தகப்பையை தூக்கி வீச இரண்டும் நம் அதிபரின் தலையில் விழுந்து வாங்கிக்கட்டிய சம்பவமும் உண்டு. (அது வேறு பதிவில் வரும் .... நண்பர்கள் இதை வாசித்து விட்டு ஆட்டோ அனுப்பாமல் இருந்தால்... )   
நன்பர்களுடன் இருக்கும் போது ஏதும் பிரச்சனை, கஷ்டம் வந்தாலும் கூட பின்னாளில் அதை நினைக்கும் போது இனிமையாக இருக்கும். அதுதான் நட்பு.

Monday, 9 August 2010

ஒரு நிமிடத்தில் தூக்கம் வர என்ன வழி?நம் நண்பன் ஒருவன்  பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தான்.
(மற்றவன் எல்லாம்......)
ஒரு நிலையத்தில் வண்டி நிற்க,
ஒரு வயதாளி வண்டியில் ஏறினார்.
இதை பார்த்த நண்பன் 
ஆஹா… இந்த பூட்ட கேஸுக்கு
இடம் கொடுக்க வேண்டுமே
என்றெண்ணி தூங்குவது போல்
பாசாங்கு செய்யலானான்…..
(நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா
பண்ணும் நம் வளரும் சமுதாயம் வாழ்க)
அவனுக்கு பக்கத்தில் இருந்த
”ஒரு மனிதர்” இடம் கொடுத்தார்.
அந்த வயதானவரும் ஒரு குசும்புக்காரர் என்று
நம்ம ஆளுக்கு தெரியாதே…
(நம்ம கதையில் twist வேணுமில்ல…)
மெதுவாக தட்டி பேசிய வயதானவர்,
”தம்பி வயது போய் விட்டதால் இரவில்
சரியாக தூக்கம் வருவதில்லை,
ஒரே நிமிடத்தில் தூங்கும் மந்திரத்தை
எனக்கும் சொல்லிக் குடுப்பா…..”
என்று சொல்ல……
அசடு வழிந்தார் நம்ம ஆளு.

Sunday, 8 August 2010

இம்மாத PiT புகைப்பட போட்டிக்கான புகைப்படங்கள்

PiT புகைப்பட போட்டி பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. PiT புகைப்பட போட்டிக்கான இம்மாத தலைப்பு "பச்சை". நானும் எனது புகைப்படமொன்றை அனுப்பலாம் என முடிவெடுத்த போது எதை அனுப்பலாம் என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. (எல்லாம் மொக்கை புகைப்படங்கள்). எனவே தெரிவை உங்களிடம் விடுகிறேன். இம்மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன் சமர்பிக்க வேண்டும். எனவே உங்கள் கருத்துக்களை பின்னுட்டமாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1 . எனது ஊரில் எடுத்தது. 
2 . எனது ஊரில் எடுத்தது. 
3 . அபுதாபியின் ஒரு புற்தரை 
4 . இறம்பொட நீர்வீழ்ச்சி. நுவரேலியா செல்லும்  வழியில்....
5 . நுவரேலியா செல்லும்  வழியில் கட்டுகித்துல எனும் ஊரில் .... 
6 . எனது ஊரில் எடுத்தது....
7. Dubai World Trade Centre Residence. துபாயில் என்னுடைய முதல் வேலைத்தளம். இந்த கட்டிட கட்டுமான பணியின் போது Site Architect 'ஆக வேலை பார்த்தேன். அப்போது எடுத்த புகைப்படம்


Saturday, 7 August 2010

கல்வி கற்க வேண்டிய வயது………..


ஒரு அறிஞர் (சத்தியமா அது நானில்லைங்கோ) பொது மேடையில் 
கல்வியின் சிறப்பு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். 
அங்கு இருந்த ஒரு பெண் தன் பிள்ளைக்கு 
எந்த வயதில் இருந்து 
கல்வி கற்று கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்?
என்று கேட்டாள். 
அதற்கு அந்த அறிஞர் 
“உன் குழந்தையின் வயதென்ன?” என்றார். 
அப்பெண் “நான்கு வயதாகின்றது” என்றாள். 
“நீ உன் குழந்தையின் நான்கு வருடத்தை 
வீணடித்து விட்டாய்” என்று பதிலளித்தார்.
இன்னும் என்ன பாக்குறீங்க? 
போங்கப்பா………போய் பிள்ளைகளையாவது படிக்க வைங்கப்பா…….
அதற்கு முன்னர் ஓட்டுப் போட்டுட்டு போயிருங்க……………