Tuesday 7 July 2015

பெட்ரோல்மக்ஸ் லைட்டேத்தான் வேணுமா???

சம்பவம் 1:
அன்று கடையை மூடி விட்டு வீடு செல்ல கொஞ்சம் லேட் ஆயிச்சு. பொதுவா இருட்ட முன்னாடியே கிளம்பிடுவேன், அன்று அது மிஸ்ஸிங். வளைவுகள் நிறைந்த வீதி, அதனால் ஒரு பைக்கின் பின்னால் மெதுவாக சென்று கொண்டிருந்தேன். வளைவுகள் முடிந்து கொஞ்சம் நேரான பாதை வர பைக்கை முந்திடலாம்னு எக்ஸ்லேட்டரை முறுக்க, திடீர்னு முன்னாடி வந்து நின்றது ஒரு சைக்கிள்.

ப்ரேக் பிடிக்க நினைக்கவும் முடியல, கொஞ்சம் பாதையின் வெளியே நான் திருப்ப, நேருக்கு நேர் மோதாமல் சைக்கிளோட Handle என் கையை பதம் பார்க்க என் சைட் கண்ணாடி சைக்கிள்காரனுடைய கையை பதம் பார்க்க, வெவ்வேறு திசையில் போய் விழுந்தோம். பைக் விழாமலிருக்க முயற்ச்சி செய்ததில் எனது காழும் கையும் தசை பிடிப்புக்காளாகி விட்டது.

விழுந்தவுடன் பைக்கை தூக்கவுமில்லை, உடனே சைக்கிள்காரனிடம் ஓடிச் செல்ல அவனும் மெதுவாக எழுந்துவிட்டான். ஒரு 70 வயது மதிக்கத் தக்க ஒரு கிழவன், நல்லா குடிச்சிருந்தான். “என் மேலஎந்தத் தப்பும் இல்ல, நான் என் பக்கத்துலதான் வந்தேன்”னு கத்திகிட்டு இருந்தான். அதற்குள் கூட்டமும் சேர்ந்துவிட்டது.

அவனுக்கு கையில் கொஞ்சம் ரத்தம் கசிந்திருந்தது, அவனை அதை பார்க்க விடவில்லை, சைக்கிளுக்கு எந்தக் காயமும் இல்லை. பொதுவா இப்படி விபத்துக்கள் நடந்தால் நம்மளிடம் பணம் அறுத்து விடுவார்கள். சிங்கள ஊர், அடிபட்டவனும் சிங்கள ஆளு, கொஞ்சம் விட்டா நம்மள மேய்ஞ்சிடுவானுங்க,அதனால யாரையும் வாய் திறக்க விடல, நானே வலவலனு பேசி, அந்தக் கிழவன யோசிக்கவே விடாம, அவசரமாக அந்த இடத்திலிருந்து அனுப்பிவிட்டு எஸ்கேப் ஆனேன்.

அந்தக் கிழவன் சைக்கிளில் எதாவது ஒரு வெளிச்சம் கொண்டுவந்திருந்தால் அந்த விபத்து தடுக்கப் பட்டிருக்கும். அட்லீஸ்ட்,ஒரு Reflection Lightஆவது சைக்கிளில் வைத்திருக்க வேண்டும். டுபாயில் சைக்கிளில் போவோர் கட்டாயமாக Reflection kit, Helmet அணிந்திருக்க வேண்டும். இது போன்ற சட்டங்கள் நம் நாட்டிலும் வேண்டும்.

சம்பவம் 2:
இந்த அம்பவம் முடிந்து ஒரு வாரம் இருக்கும், பக்கத்து டவுனுக்கு போகலாம்னு பேமிலியுடன் ஆட்டோவில் கிளம்பினேன். பெட்ரோல் ஷெட்’டில் பெட்ரோல் அடித்துவிட்டு, ரோட்டுக்கு ஆட்டோவை போட பார்க்கும் போது, திடீர்ன்னு ஒரு லைட் இல்லாத சைக்கிள்காரன் முன்னாடி வந்து சேர, மனைவி போட்ட சப்தத்தில் ஒரு ரத்தக் களரி ஜஸ்ட்டு மிஸ்ஸு. எனக்கு செம டோஸ் கிடச்சதுனு நான் சொல்லாமலேஉங்களுக்கு தெரிந்திருக்கும்.
அப்படியே ஒரு மூனு கிலோ மீட்டர் போயிருப்போம், புதுசா போட்ட நல்ல கருப்பு ரோடு, அதுல ஏதோ வெளிச்சம் அசையுர மாதிரி தெரிந்தது. பக்கத்துல போகும் போதுதான் பார்த்தேன், கருப்பு ரோட்டுல கருப்பு ட்ரெஸ்ல அதே கலருல ஒரு கிழவி விழுந்து கிடக்குறா. நான் ப்ரேக் அடிச்சு வண்டிய சமாளிக்கிறதுக்குள்ள, மெதுவா எழுந்து ஓரமாயிடுச்சு அந்தக் கிழவி,

கையில் வெளிச்சம் இருந்ததால் அன்று ஒரு விபத்து தடுக்கப் பட்டது, இல்லாவிட்டால் கிழவி என் ஆட்டோவுக்கடியில் “ஆச்சி65” ஆயிருக்கும். ஓ மை காட்!!!

சம்பவம் 3:
இரண்டாவது சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும், ஒரு நாள் இரவு பள்ளிக்கு ஆட்டோல போய் தொழுதுட்டு வெளிய வந்து பாக்குறேன், ஒரு நாய் ஆட்டோ சீட்டுல புதுசா போட்ட சீட் கவர்ல ஒய்யாரமா படுத்துட்டு இருக்கு. ஆட்டோக்குள்ள இருந்ததால நாய அடிக்க முடியல. புது சீட் கவர கழுவ சோம்பரத்துல வீசிட்டேன்.

அடுத்த நாள் இரவு மஸ்ஜித்திலிருந்து வெளியே வர்ரேன், அதே நாய் ரோட்டுப் பக்கமா இருளுக்குள்ள ஒட்டிட்டு இருக்கு, வந்த கோவத்துல கைல கெடச்ச செங்கள் பாதிய ஒரே வீசு. இருட்டிலிருந்து “அய்யோ... அம்மா”னு கதறல் சத்தம்.

ஆஹா.. தமிழ் தெரிஞ்ச நாயா இருக்குமோனு டார்ச்சை எடுத்துட்டு போய் பார்த்தா, வெள்ளையும் சொல்லையுமா நம்ம ஊரு கல்யாண ப்ரோக்கர் காலில் ரத்த காயத்தோடு ரோட்டில் விழுந்து கிடக்க, பக்கத்துல நான் வீசின செங்கல் பாதி.

சாரிண்ணே!! நாய்க்கு அடிச்சது.... தவறுதலா...

என்ன பாத்தா நாய் மாதிரியாடா இருக்கு.....


இல்லண்ணே!!  நாய பாத்தாதான் உங்கள மாதிரி இருக்கு(ஆனா ஊருக்குள்ள அத விட கேவலமாத்தான் உங்கள பாக்குராங்க....- மைண்ட் வாய்ஸ்)

டேய்!! எனக்கும் நாய்க்கும் வித்தியாசம் தெரியலயா????

அது உங்க தொழில் மகிமைண்ணே!!!!

டேய்!!!!

அங்கயும் கூட்டம் கூட, கல்யாண ப்ரோக்கர் மேல ஊர் மக்களுக்கு இருந்த கடுப்புல என் தலை தப்பியது. இருட்டில் வராமல் ஏதாவது ஒரு வெளிச்சம் கொண்டுவந்திருந்தால் கல்யாண ப்ரோக்கருக்கு செங்கல் பாதியால் அடி வாங்கியிருக்க வேண்டியதில்லை.

No comments:

Post a Comment